ஆர்வ மோதல்
ஆர்வ மோதல்
Conflict of Interest
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது டெல்லியில் இராஜ நாகங்களின் தொல்லை அதிகமாக இருந்தது . பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் . அதுவும் இராஜ நாகம் என்றால் கேட்கவா வேண்டும் ? ஆங்கிலேய அரசாங்கம் இராஜ நாகத்தைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசளிக்கப்படும் என்பதாக முடிவெடுத்தது . நம்மவர்கள் தெருவில் திரியும் இராஜ நாகங்களைப் பிடித்துக் கொடுத்து பரிசுகளை வாங்கிய வண்ணம் இருந்தனர் . ஒரு கட்டத்தில் நாட்டில் பிடித்துக் கொடுக்கப் பாம்பு எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னர் நம்மவர்கள் காட்டிற்குச் சென்று பாம்புகளைப் பிடித்து வந்து ஆங்கிலேய அரசாங்கத்திடம் கொடுத்துப் பரிசுகளைப் பெறத் தொடங்கினர் . அரசாங்கம் இதனைக் கண்டறிந்து இந்தப் பாம்புப் பரிசுத் திட்டத்தைத் தடை செய்து விட்டது . அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான இந்த ஆர்வ மோதலின் கதை சுபமாக முடியவில்லை . நம்மவர்கள் எஞ்சிய பாம்புகளை நடுத்தெருவில் விட்டு விட்டுச் சென்று விட்டனர் . இப்போது டெல்லி நகர வீதிகளில் இந்தப் பரிசுத் திட்டத்திற்கு முன்னர் இருந்த பாம்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு பாம்புகள் சுற்றித் திரிந்த வண்ணம் இருந்தன .
பங்குச்சந்தையில் இந்த ஆர்வ மோதல்களின் பாதிப்பு பல்வேறு வகைகளில் வெளிப்படும் . ULIP ஐ எடுத்துக் கொள்ளுங்கள் . முதலீட்டையும் காப்பீட்டையும் இணைக்கும் இந்த Unit Linked Insurance Plan களின் அடிப்படையே தவறானது . மேலும் இந்தத் திட்டங்களின் முகவர் தரகு front load என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது . அதாவது ஒருவர் ULIP வகை காப்பீடுகளை எடுத்துக் கொண்டால் அதற்கான முகவர் தரகு ஆரம்ப வருடங்களுக்கு மிகை அளவில் இருக்கும் . போகப்போகக் குறைந்து விடும் . ULIP களை எடுக்கவே கூடாது . தப்பித்தவறி எடுத்தால் காப்பீட்டுக் காலம் முழுவதும் கட்டினால் தான் ஓரளவேனும் சேதாரமில்லாமல் வெளியே வருவதற்கான வாய்ப்பு உள்ளது . ஆனால் முகவர்கள் நடுவே புகுந்து விளையாடி விடுவார்கள் . குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் முனைமத் தொகை (Premium) கட்டிய பின்னர் காப்பீடைத் திரும்ப ஒப்படைக்கக் (surrender) காப்பீடுதாரர்களை வலியுறுத்துவார்கள் . ' இந்த மாதிரி இந்த ULIP ன் நிகர சொத்து மதிப்பு (NAV) 15 ரூபாய் ஆகி விட்டது . நாம் இந்த ULIP ஐ விற்று விட்டு 10 ரூபாய் என்ற விலையில் புதிய ULIP ஐ எடுத்துக் கொள்ளலாம் ' பிறகென்ன ? முகவருக்குத் தரகு சென்று விடும் . காப்பீட்டு நிறுவனங்கள் புதிய வர்த்தக இலக்குகளை (New Business Targets) எட்டி விடும் . காப்பீடுதாரர்களின் நிலை தான் பாவம் . காப்பீட்டு நிறுவனங்கள் இன்னொரு தகிடுதத்தமும் செய்கின்றன . ஆரம்ப வருடங்களில் முகவர் தரகு அதிகமான அளவீட்டில் இருக்கும் என்று பார்த்தோம் . இது போக தொடர்ந்த வாக்கிலான (ongoing) மேலாண்மைச் செலவுகள் , இறப்பு வீதச் செலவுகள் என்று நானாவித செலவுகள் உள்ளன . பரஸ்பர நிதித் திட்டங்களில் இந்த மாதிரியான செலவுகளைக் கழித்து விட்டு நிகர சொத்து மதிப்பைக் (NAV) கணக்கிடுவார்கள் . ஆனால் ULIP ல் இந்த மாதிரி கழிப்பதற்கு மாறாக unit ஐ கழிக்கும் ஒரு நடைமுறை இருக்கிறது . இதனால் நிகர சொத்து மதிப்பு கூட இருப்பதான ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது .
பங்கு வர்த்தகத்திலும் இதே பிரச்னை தான் எழுகிறது . நாம் பங்குகளை இலாபத்தில் விற்றாலும் அல்லது நஷ்டத்தில் விற்றாலும் பங்குத்தரகருக்கான தரகு தவறாமல் சென்று விடும் . நீண்ட கால அடிப்படையில் தான் பங்குகள் பன்மடங்காகக் கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது . ஆனால் தரகருக்கான சன்மானம் நாம் பங்குகளை வாங்குவதிலும் விற்பதிலும் உள்ளது . இயற்கையாகவே ஒரு ஆர்வ மோதல் எழுகிறது .
2000 ஆண்டு வாக்கில் Y2K பிரச்னையின் போது எங்கும் கணினித் துறை பற்றிய பேச்சாகவே இருந்தது . தகவல் தொழில்நுட்பப் பங்குகள் அசாதாரணமான PE அளவுகளில் வர்த்தகமாகிக் கொண்டிருந்த நேரம் . அப்போது அனைத்து பரஸ்பர நிதிகளும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த புதிய பரஸ்பர நிதித் திட்டங்களை அறிமுகம் செய்தன . இது buy low sell high என்ற பங்குச்சந்தை தாரக மந்திரத்திற்கு எதிரானதாகும் . கொஞ்ச காலம் கழித்து எங்கு பார்த்தாலும் Infrastructure துறை சார்ந்த பரஸ்பர நிதிகள் பற்றிய பேச்சாகவே இருந்தது . SEBI ன் சட்ட திட்டங்கள் மூடிய நிலை பரஸ்பர நிதிகளுக்கு (closed ended mutual fund) சாதகமாக இருந்த காலகட்டத்தில் அந்த மாதிரியான நிதிகள் சந்தையை மூழ்கடித்தன .
பரஸ்பர நிதி நிறுவனங்கள் , அவர்கள் மேலாண்மை செய்யும் சொத்துக்களை (Assets Under Management) அதிகரிக்கும் பொருட்டு அவ்வப்போது புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வாக்கில் மட்டுமே இருக்கும் . மேலும் அவர்களுடைய பரஸ்பர நிதித் தொகுப்பில் Infrastructure துறை சார்ந்த பரஸ்பர நிதி இல்லையெனில் அது சார்ந்த பரஸ்பர நிதியை அறிமுகம் செய்வது அவர்களைப் பொறுத்தவரை சரி . நாம் நமது பரஸ்பர நிதித் தொகுப்பு முழுமை பெறும் வகையில் ஏற்கனவே சந்தையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் , நமது பரஸ்பர நிதித் தொகுப்பில் இன்னமும் இடம் பெறாத ஒரு நிதியில் முதலீடு செய்வது தான் சரியான முடிவாக இருக்க முடியும் . மாறாக ஒரு பரஸ்பர நிதி யூனிட் பத்து ரூபாய்க்கு மலிவாகக் கிடைக்கிறது என்ற மாயவலையில் சிக்கிக் கொள்ளக்கூடாது .
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது இந்த ஆர்வ மோதல்களில் கவனம் கொள்ளுங்கள் . காப்பீடு என்றால் Term Assurance மட்டுமே எடுக்க வேண்டும் . Small Cap பங்குகளில் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதி வாயிலாக முதலீடு செய்வது சிறு மற்றும் குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதின் அபாயத்தைக் குறைப்பதில் பேருதவி புரிகிறது . அதே மாதிரி MNC பங்குகளினால் ஆன ஒரு பங்குத் தொகுப்பைத் தனிப்பட்ட முறையில் உருவாக்க இலட்சங்களில் முதலீடு செய்ய வேண்டும் . மாறாக MNC சார்ந்த பரஸ்பர நிதிகளில் ஆயிரங்களில் மட்டும் முதலீடு செய்தால் போதுமானது . நிறுவனப் பங்குகளில் மதிப்பு முதலீடு செய்து பல்லாண்டுகள் வைத்திருப்பதில் உங்கள் நிதி விடுதலைக்கான தீர்வு அடங்கியுள்ளது . இவ்வாறாக உங்கள் ஆர்வமும் உங்கள் முகவர் மற்றும் தரகருக்கான ஆர்வமும் ஒரு புள்ளியில் இணையும் . அதுவே காப்பீடு மற்றும் முதலீடு செய்ய வேண்டிய தருணமாகும் .
Comments
Post a Comment