ஜென் கதைகள் - 2

ஜென் கதைகள் - 2


1. புல்லின் நுனியில் பிரபஞ்சம்

மதிப்பு முதலீட்டாளர்களின் கழகம் (Value Investors Club) ஒன்று ஒவ்வொரு வருடமும் முதலீட்டாளர் மாநாடு ஒன்றை நடத்துவது வழக்கம் . அந்த மாநாட்டின் முத்தாய்ப்பான நிகழ்வாக ஒரு முதலீட்டாளர் தனித்துவமான (unique) பங்கு ஒன்றைப் பரிந்துரை செய்வது வழக்கம் . ஒருமுறை வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த முதலீட்டாளர் ஒருவர் தன்னிகரற்ற பங்கு ஒன்றைப் பரிந்துரைத்தார் . அனைத்து முதலீட்டாளர்களும் இந்த நிறுவனப் பங்கை எவ்விதம் இனங் கண்டீர்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர் . அது அவர்கள் நடத்தும் PMS (Portfolio Management Services) ல் இடம்பெற்ற பங்கேயன்றி வேறில்லை . அந்த முதிர்ந்த முதலீட்டாளர் தொடர்ந்து சொன்னது : நாம் இவ்வாறு தான் நம்  மகிழ்ச்சியைத் தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்தவாறு இருக்கிறோம் . ஆனால் நம் வீட்டு வாசற்படிக்கு அடியில் முளைத்திருக்கும் புல்லின் நுனியில் நம்மைச் சுற்றியுள்ள மொத்தப் பிரபஞ்சமும் தெரிவதைக் காண மறந்து விடுகிறோம் .


2 . வானவில்லைத் துரத்தினவன்

ஜென் குருவிடம் முதலீட்டாளர் ஒருவர் மதிப்பு முதலீடு முழுவதையும் கற்றுத் தேர்ந்தார் . பின் குருவிடம் பிரியாவிடை பெற்றுச் செல்லும் போது பக்கத்து ஊரில் வேக முதலீட்டு (Momentum Investing) குரு ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் வேக முதலீட்டு உத்திகளைக் கற்றுத் தெளிய இருப்பதாகவும் கூறினார் . குரு சொன்னது : உன் கவனத்தை ஏதாவது ஒன்றில் குவி . இரண்டு முயல்களைத் துரத்துபவன் எதனையும் பிடிக்க மாட்டான் .


3 . பயணமே இலக்கு

ஜென் குருவிடம் பத்து வருட மதிப்பு முதலீட்டுப் பாடத்தை பயின்ற மாணவர் ஒருவர் தனது பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருந்தார் . இன்னும் ஒரேயொரு தேர்வு தான் பாக்கி . அதை முடித்தால் மதிப்பு முதலீட்டுப் பட்டம் கிடைத்து விடும் . அந்த நாளும் வந்தது . ஜென் குரு வாய்மொழித்தேர்வாக ஒரேயொரு கேள்வியைக் கேட்டார் . இந்த மதிப்பு முதலீட்டாளர் பட்டம் உனக்கு எதற்காகக் கொடுக்கப்படுகிறது ? என்னுடைய பத்து வருடக் கடின உழைப்பிற்குக் கிடைத்த பரிசு . குரு அந்த மாணவரை அடுத்த வருடத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு திருப்பி அனுப்பி விட்டார் . அடுத்த வருடம் வந்தது . குரு மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார் . முதலீட்டுக் கலையின் மேன்மைக்கும் உயர்ந்த சாதனைக்குமான ஒரு குறியீடு . குரு அந்தப் பதிலில் திருப்தி கொள்ளாதவராக அவரை அடுத்த வருடம் வரச் சொல்கிறார் . மீண்டும் அதே கேள்வி. இந்தப் பட்டம் ஒரு முடிவல்ல . இது, ஒருபோதும் முற்றுப் பெறாத மேன்மையான புதிய  பயணத்தின் தொடக்கம் மட்டுமே . குருவின் முகத்தில் மகிழ்ச்சி .


4 . எப்போதும் மகிழ்ச்சி

ஜென் குருவும் அவருடைய சிஷ்யப் பிள்ளையும் தலால் தெருவில் நடைப்பயிற்சியை மேற்கொண்டவாறே பேசிக் கொண்டது :

சி. பிள்ளை : இன்றைய சந்தை எப்படி இருக்கும் ? காளையா அல்லது கரடியா ?

ஜெ. குரு :  இன்றைய சந்தை எனக்குப் பிடித்தவாறு மட்டுமே இருக்கும்.

சி. பிள்ளை : இன்று சந்தை பிடித்த மாதிரி தான் இருக்கும் என்பது உங்களுக்கு முன்னரே எப்படித் தெரியும் ?

ஜெ. குரு : எப்போதுமே நாம் விரும்பியதே நமக்குக் கிடைத்துக் கொண்டிராது . எனவே நமக்குக் கிடைப்பதை விரும்பக் கற்றுக் கொள்வதே ஞானமாகும் . நிச்சயமாக இன்றைய சந்தை எனக்குப் பிடித்தவாறு தான் இருக்கும் . இன்று காளைச்சந்தை என்றால் என்னுடைய பங்குத் தொகுப்பின் மதிப்பு கூடி எனக்கு மனமகிழ்ச்சியைத் தரும் . இந்தக் காளைச் சந்தையிலும் மதிப்பு முதலீட்டு வாய்ப்புகள் அனேகம் உள்ளன . மாறாகக் கரடிச்சந்தை என்றாலும் எனக்கு மனமகிழ்ச்சியே . என்னுடைய பங்குத் தொகுப்பு தற்காலிக மதிப்பிழப்பிற்கு உள்ளானாலும் நான் வாங்கத் தவறிய பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறும் .


5 . தேடாமல் தேடு

ஜென் குருவிடம் முதலீட்டாளர் ஒருவர் பங்குச்சந்தை குறித்துப் பல்லாண்டுகளாகப் பயின்று வந்தார் . ஆனாலும் அவருக்குச் சந்தை சரிவரப் புரிபடவில்லை . அதன் ஏராளமான நகரும் பகுதிகள் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துவதாக இருந்தன . சாண் ஏறினால் முழம் சறுக்கும் வழுக்கு மரமாக சந்தை இருந்தது . F & O கூச்சல்கள் ஓய்ந்த ஒரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமையன்று முதலீட்டாளரும் குருவும் பேசிக் கொண்டிருந்தனர் . "இனி எந்த வழியில் செல்வது ? "

"சாதாரணமான மனமே சந்தையைப் புரிந்து கொள்வதற்கான சரியான வழி" என்பதாகக் குரு பதிலளித்தார் . 

" எனில் அதனை நோக்கி நாம் நம் மனதைச் செலுத்தலாமா ? " என்று முதலீட்டாளர் வினவினார் . 

"நீ அதனை நோக்கி மனதைச் செலுத்தினால் அதிலிருந்து விலகி விடுவாய் " என்று குரு எச்சரித்தார் .

" நாம் அவ்வாறு முயற்சிக்கவில்லை என்றால் அது தான் வழி என்று எவ்விதம் தெரியும் ? "

"அந்த வழி தெரியும் மற்றும் தெரியாது என்பதனால் ஆக்கப்படவில்லை . தெரியும் மற்றும் தெரியாது என்ற இரண்டும் மாயைகள் . சந்தேகத்திற்கு இடமின்றி ஒன்றைத் தெரிந்து கொண்டோம் என்ற போக்கு ஒரு முட்டுச் சுவர் . தெரியாது என்பதும் ஒரு முட்டுச் சுவரே . பகல் இரவு , மகிழ்ச்சி துக்கம் , தெரிந்தது தெரியாதது முதலான இந்த உலகத்தின் இரட்டைகளை நீ கடந்து செல்ல வேண்டும் "

"அப்போது சந்தையில் எது சரி ? எது தவறு ? எவ்விதம் நாம் அதனை இனங்காண்பது ? "

குரு முடிவாகச் சொன்னது . "  நீ அதனைத் தேடாமல் தேட வேண்டும் . மகிழ்ச்சிக்காக ஏங்காமலிருப்பது தான் மகிழ்ச்சியை அடைவதற்கான வழியாகும் . பங்குச்சந்தையிலும் இலாபத்தை  நேரடியாகத் தேடாமலிருப்பதே இலாபம் பெறுவதற்கான தேர்ந்த  வழிமுறையாகும் . எப்படி வசந்த காலத்தில் சொல்லி வைத்தது மாதிரி ஆயிரமாயிரம் பூக்கள் மலர்கின்றன ? பௌர்ணமியன்று வானத்திற்கு முழு நிலவு எவ்விதமாக வருகிறது ? கோடைக்காலத்தில் தென்றல் வீசுகிறது . குளிர்காலத்தில் வெண்பனி பெய்கிறது . உன் மனதில் வெற்று மயக்க மேகங்கள் எதுவும் இல்லையென்றால் அதுவே உனக்கான பருவகாலம் ஆகும் . அந்தப் பருவகாலம் அறுவடைக் காலத்திற்கு இட்டுச்செல்லும்"

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்