நம்பிக்கை , பொறுமை

 நம்பிக்கை , பொறுமை

[ முன் குறிப்பு : பங்குச்சந்தை குறித்த பதிவில் கவிதைக்கு என்ன இடம் இருக்கப்போகிறது என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். பங்குச்சந்தையில் வெற்றி பெற உளப்பாங்கு (temperament) என்பது ஒரு மிக முக்கியமான மென் சொத்து (soft asset) என்று வாரன் பஃபெட் கூறுகிறார். அந்த வகையில் ஜான் பர்ரோஸ் எழுதிய கீழ்க்காணும் கவிதை பங்குச்சந்தையில் வெற்றி பெற உதவும் மிக முக்கியமான மனப்பாங்கு பற்றிக் கூறுகிறது ]

காத்திருக்கிறேன்

" நிதானத்துடன் கைகட்டிக் காத்திருக்கிறேன் காற்றுக்கோ , அலைக்கோ , கடலுக்கோ கவலைப்படாமல் . காலத்தையோ கர்ம வினையையோ குறை கூறுவதில்லை . ஏனெனில் எனக்குண்டானது எனக்குக் கிடைத்தே தீரும் .

நான் அவசரப்படமாட்டேன் ,  தாமதம் செய்வேன் . இந்த பரபரப்பினால் என்ன பயன் ? நான் பரந்த வெளியினூடே நிற்கிறேன் . என்னுடையது என்னை அடையாளம் கண்டு கொள்ளும் .

நித்திரையில் , விழிப்பில் , இரவு அல்லது பகலில் நான் தேடும் நண்பர்கள் என்னைத் தேடி வருகிறார்கள் . என் உடைமையை எந்தக் காற்றும் அடித்துக்கொண்டு போக முடியாது . விதியின் போக்கையும் மாற்றிவிட முடியாது . 

நான் தனியனாக நிற்பதால் என்ன வந்து விடப் போகிறது ? வரும் வருடங்களுக்காக மகிழ்வுடனே காத்திருக்கிறேன் . என் மனம் எங்கே விதைத்ததோ அங்கே அறுவடை செய்து உழைப்பினால் வந்த பயனை சேகரித்து விடும் .

தண்ணீருக்கு நன்றாகத் தெரியும் தன்னவர்களை . அதோ அந்த மலைச்சுனையிலிருந்து நீர் எடுத்து ஓடைக்குத் தருகிறது . அப்படித்தான் நன்மையும் சம நோக்குடன் ஆனந்தமயமான ஆன்மாவுக்குப் பாய்கிறது . 

வானத்திற்கு ஒவ்வொரு இரவும் விண்மீன்கள் வந்து விடுகின்றன . பேரலைகளும் கடலுக்கு வந்து பாய்கின்றன . காலமோ , இடமோ , பள்ளமோ , மேடோ எனக்குச் சேர வேண்டியதைச் சேராமற் செய்து விட முடியாது "

இந்தக் கவிதை என் மனதில் எழுப்பிய எண்ண அலைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் . 

பங்குச்சந்தையில் அறியாமையை விட தவறான மனப்பான்மைக்கு நாம் கொடுக்கக்கூடிய விலை அதிகம் என்று John Train கூறுகிறார். நம்பிக்கை , தாமதமான மனநிறைவு மற்றும் பொறுமை என்ற குணக்கூறுகள்  பங்குச்சந்தையில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி பெற உதவும் மிக முக்கியமான  மனப்பாங்குகளாகும் . 

வாரன் பஃபெட் ஒரு நிறுவனத்தை அடிப்படைப் பகுப்பாய்வு செய்து அதன் பங்குகளை வாங்க முடிவெடுக்கிறார் . ஆனால் அந்த நிறுவனப் பங்குகளை  வாங்க 30 ஆண்டு காலம் எடுத்துக் கொண்டதாகப் படித்திருக்கிறேன். நன்றாகக் கவனியுங்கள் , பங்குகளை வாங்குவது என்ற முடிவை எடுக்க மட்டும் முப்பது ஆண்டு காலங்கள் . முப்பது ஆண்டுகளின் பின்னர் தான் அந்த நிறுவனப் பங்கு மதிப்பு முதலீடாக அவர் கணக்கிட்ட விலைப் பட்டையில் (price band) வாங்க ஏதுவாக வர்த்தகமாகிறது. இவ்வாறு பார்த்துப் பார்த்து வாங்கிய பங்குகளை ஆண்டாண்டு காலம் வைத்திருப்பது தான் அவருடைய அகழி (moat) இந்த உடனடி யுகத்தில் இவ்வாறு சிந்தித்துச் செயலாற்றுவது ஒரு கேந்திரமான அனுகூலமாகும் (strategic advantage) 

பங்குகளை வாங்க நிதானத்துடன் கை கட்டிக் காத்திருங்கள். அவசரம் கொள்ள வேண்டாம் . நல்ல பங்கு உங்களை அடையாளம் கண்டு கொள்ளும். அதாவது உள்ளுணர்வில் (intuitive) உங்களுக்கான பங்கை நீங்கள் அடையாளம் கண்டு வாங்கி விடுவீர்கள் . 

நான் தனியனாக இருப்பதால் என்ன வந்து  விடப்போகிறது என்ற வரிகள் நீண்ட தூர ஓட்டக்காரர்களின் தனிமை (The loneliness of the long distance runner) என்ற கருத்தாக்கத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.  பங்குச்சந்தையில் குறுகிய கால ஓட்டங்களில் நிறையப் பேர் கலந்து கொள்வார்கள்.  நீண்ட தூர மாரத்தான் ஓட்டக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் . குறுகிய கால ஓட்டக்காரர்களுக்கு அவர்களது வெற்றி தோல்விகளின் முடிவுகள் அப்போதைக்கப்போது தெரிந்து விடும். நீண்ட தூர ஓட்டக்காரர்களுக்கு இந்த மாதிரியான உடனடி முடிவுகள் கிடைக்கப் பெறாது. அதைக் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை . அவர்களைப் பொறுத்தவரை ஓடுவதே ஒரு வெற்றியாகும். மேலும் இந்த வெற்றியின் மூலமாகக் கிடைக்கும் பணம் ஒரு துணை விளைபொருள் (by-product ) மட்டுமே . 

இந்தக் கவிதை எனது இருபதாவது வயது நாட்குறிப்பிலிருந்து எடுக்கப் பெற்றது. எப்போதோ படித்துக் குறித்து வைத்திருந்த கவிதை ஒன்று பல்லாண்டுகள் கழித்து பதிவு ஒன்றின் பாடு பொருளாக மாறும் பாங்கைக் கவனியுங்கள். என்றோ விதைத்தது இன்று அறுவடையாகிறது . வாழ்க்கையில் நாம் வைக்கும் ஒவ்வொரு புள்ளியும் பின்னர் ஒரு கோலமாக இணையும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் ஏற்கெனவே கூறியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்