இலக்கு குறித்த சில எண்ணங்கள்
இலக்கு குறித்த சில எண்ணங்கள்
பங்குகளுக்கு இலக்கு விலை வைத்து விற்பது நம் காலை நாமே வெட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என்று பார்த்திருக்கிறோம் . முதலீட்டு வாழ்க்கையில் இலக்குகள் வைத்துக் கொள்ளலாமா , அப்படி வைத்துக் கொண்டால் அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை பல்வேறு கோணங்களில் இந்தப் பதிவில் பார்க்கலாம் .
முதலீட்டு வாழ்க்கையில் இலக்குகள் வைத்துக் கொண்டு அதனை நோக்கிப் பயணப்படுதல் தவறில்லை . ஆனால் இலக்கை சீக்கிரமாக அடைகிறேன் பேர்வழி என்று இந்தப் பயணத்தை விரைவு படுத்தக் கூடாது . கூட்டு வட்டியை விரைவு படுத்தினால் முதலுக்கே மோசம் நேரலாம் .
இலக்கை எட்டிய பின்னர் எக்காரணம் கொண்டும் புதிய இலக்குகளை நோக்கி ஓடக்கூடாது . ஒரு சின்ன சொந்த உதாரணம் மூலமாக இதனை விளக்குகிறேன் .
ஒரு காலத்தில் பங்கு மற்றும் இதர முதலீடுகள் மூலமான பணப்பாய்ச்சல் (cash flow) மாதம் 5000 ரூபாய் கிடைத்தால் போதும் என்பதான ஒரு இலக்கு இருந்தது . அந்த இலக்கை எட்டிய பின்னர் வாரம் 5000 கிடைத்தால் தேவலை என்பதான ஒரு எண்ணப்போக்கு . அந்த இலக்கையும் எட்டிய பின்னர் இப்போது வாரம் 10000 கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது . இந்த மாதிரி இலக்குக் கம்பங்களை (goal post) தள்ளித் தள்ளி ஊன்றி அதனை நோக்கி நிரந்தரமாக ஓடிக் கொண்டே இருப்பது கானல் நீரைத் துரத்துவதற்கு ஒப்பானதாகும் . When we buy into the promise that more is better , we can never arrive என்ற Lynne Twist ன் வாசகம் கவனத்தில் கொள்ளத்தக்கது . நிறைய என்பது சிறந்தது என்பதை நம்பி ஓடினால் நாம் ஒருபோதும் அதனை அடைய மாட்டோம் . அவர் மேலும் கூறுகிறார் . Sufficiency isn't an amount at all . It is an experience , a context we generate , a declaration , a knowing that there is enough , and that we are enough . நிறைவு என்பதை பணத்தினால் சொல்ல இயலாது . அது ஒரு அனுபவம் , நாம் உண்டாக்கக் கூடிய ஒரு சூழல் , ஒரு பிரகடனம் , போதும் என்பதான ஒரு நிரம்பி வழியும் நிலை .
நீங்கள் தாழப் பறப்பவராக இருந்தால் இந்த வாரம் 10000 என்ற இலக்கு கூட்டுப் பெருக்கத்தின் காரணமாக அதுவாகவே எட்டப்பட்டு விடும் . அந்த இலக்கை நோக்கி நீங்கள் மெனக்கெட்டு ஓடவேண்டாம் .
இலக்கை நோக்கி ஓடும் பாதையில் மட்டும் கவனம் கொள்ளுங்கள் . பணம் தன்னைப்போல் வரும் . மிகவும் முக்கியமாக இந்தப் பயணத்தை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் . ஒவ்வொருவரும் தாம் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதை நேசிக்கும் எளிய கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் , அதைப் பிறர் மதிக்க வேண்டும் என்று எதிர்பாராமல் அதை மகிழ்வோடு செய்து வந்தால் இந்த உலகம் இன்னும் மகிழ்ச்சி நிறைந்ததாக , அழகு மிகுந்ததாக , ஒரு திருவிழாப் பிரதேசமாக மாறி விடும் என்பது ஓஷோவின் வைர வரிகள் .
இந்தப் பயணத்திற்கு பெரிய அளவிலான திட்டமிடல்கள் எதுவும் தேவையில்லை . வாரன் பஃபெட்டினால் capital appreciation guru என்று பாராட்டப் பெற்ற singleton னிடம் , உங்கள் கேந்திரமான உத்தி என்ன என்பதாகக் கேட்கப்பட்ட போது அவர் சொன்ன பதில் கவனத்தில் கொள்ளத்தக்கது . 'அன்றன்றைக்கு படகைத் தள்ளுவேன் , மற்றபடி ஆகப்பெரிய திட்டமிடல்கள் ஏதுமில்லை'
வால்மார்ட் நிறுவனரின் மகன் தனது தந்தையைக் குறித்துக் கூறிய வார்த்தைகள் ... அவருக்கு வால்மார்ட் நிறுவனத்தை உலகின் #1 சில்லரை வணிக நிறுவனமாக ஆக்கும் பெரிய திட்டங்கள் எதுவுமில்லை . தின அளவில் நிறுவனத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டும் என்பதான ஒரு எண்ணம் மட்டுமே இருந்தது .
வாரன் பஃபெட் , Berkshire Hathaway ஜவுளி ஆலையை வாங்கும் போது அதை முதலீட்டு நிறுவனமாக மாற்றும் திட்டம் அவர் கனவிலும் இல்லை . அதே மாதிரி காப்பீட்டு நிறுவனங்களை வாங்குதல் , அதன் மூலமான float என்ற கருத்தாக்கம் , அந்த float பணத்தைக் கொண்டு பிற நிறுவனங்களைக் கையகப்படுத்தியமை போன்ற யாவையும் இனிய விபத்துகள் (serendipity) என்ற வகையில் நிகழப் பெற்றவை .
பங்குச்சந்தையில் நகரும் பகுதிகள் நிறைய இருப்பதால் பெரிய திட்டங்கள் எதுவும் நாம் நினைத்த படி நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு . பங்குச்சந்தையில் வெற்றி பெற உங்கள் முதலீட்டு உத்திகளை உயர்ந்து வரும் பங்காதாயம் அதனை அடியொற்றிச் செல்லும் பங்கு விலைகள் என்றவாறு எளிமையாக வடிவமைத்துக் கொள்ளுங்கள் .
பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது நமது கடை முடிவான இலக்காக இருந்தாலும் அந்த இலக்கை உங்களுக்கான நங்கூரமாக (anchor) கொள்ளாதீர்கள் . அவ்விதம் பணம் சம்பாதிப்பதை உங்கள் நோக்கமாகக் கொண்டால் கரடிச்சந்தையில் நீங்கள் காணாமற் போய்விடக்கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது . அதனினும் உயரிய ஒரு இலக்கை நங்கூரமாகக் கொள்ளுங்கள் . இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கு கொள்வதை ஒரு இலக்காகக் கொள்ளலாம் .
எப்போதும் பெரிதினும் பெரிது கேளுங்கள் . சிறிய இலக்கு ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு அதில் வெற்றி பெறுவதை விட உயரிய இலக்கு ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு அதில் தோல்வியடைவது மேலானது .
Comments
Post a Comment