பங்குச்சந்தை பதில்கள் - 3
பங்குச்சந்தை பதில்கள் - 3
கேள்வி : சென்செக்ஸ் 60000 புள்ளிகளைத் தொட்டிருப்பது குறித்து ?
பதில் : Way to go ... சென்செக்ஸ் செல்ல வேண்டிய தூரம் (நீண்ட கால நோக்கில்) இன்னும் நிறைய இருக்கிறது .
கேள்வி : 52 வார குறைந்த பட்ச விலையில் பங்குகளை வாங்கி 52 வார அதிக பட்ச விலையில் விற்பது குறித்து ?
பதில் : தாராளமாகச் செய்யலாம் . பிஸினஸ் லைன் பத்திரிகையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பங்கை அதன் 52 வாரக் குறைந்த பட்ச விலையில் வாங்கி 52 வார அதிக பட்ச விலையில் விற்றிருந்தால் எவ்வளவு பணம் கிடைக்கப் பெற்றிருக்கும் என்று பகல் கனவு காணலாம் . ஒரு பேச்சுக்கு ஒருவர் இந்த மாதிரி தொடர்ந்து செய்து வந்தால் ஒரு கட்டத்தில் அவர் உலகப் பணக்காரர் வரிசையில் இடம் பெற்று விடுவார் . ஆனால் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்ற அனைவரும் தத்தம் நிறுவனப் பங்குகளை வைத்திருப்பதன் மூலமாக மட்டுமே உலகப் பணக்காரர் ஆகியிருக்கின்றனர் .
கேள்வி : நான் பங்குச்சந்தையில் குறுகிய கால முதலீட்டின் மூலமாக ஆறு மாதங்களில் 40 சதவீதம் சம்பாதித்திருக்கிறேன் . ஆண்டுக் கணக்கு போட்டுப் பார்த்தால் 80 சதவீதம் வருகிறது . இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
பதில் : உங்கள் கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .
கேள்வி : பங்குச்சந்தையில் ஒரே சமயத்தில் நீண்ட கால முதலீட்டாளராகவும் குறுகிய கால வர்த்தகராகவும் இருக்க முடியாதா ?
பதில் : முடியாது . முதலீட்டாளருக்கான மனப்பாங்கும் வர்த்தகருக்கான மனப்பாங்கும் மாறுபட்டவை . கையில் வர்த்தக சுத்தியல் இருந்தால் எதைப் பார்த்தாலும் ஆணியாக மட்டுமே தெரியும் .
கேள்வி : Eifficient Market Hypothesis (EMH) மற்றும் Capital Asset Pricing Model (CAPM) என்றால் என்ன ?
பதில் : சில கருத்தாக்கங்களைத் தெரிந்து கொள்வது அனுகூலமாக இருக்கும் . சில கருத்தாக்கங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது அனுகூலமாக இருக்கும் . இவையிரண்டும் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை .
கேள்வி : இந்தப் பதிவுகளில் பங்குப் பரிந்துரைகள் ஏன் இடம் பெறுவதில்லை ?
பதில் : மீனைப் பிடித்துக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது மேலானது .
கேள்வி : அது என்ன Invert Investing ?
பதில் : முதலீடு அல்லாதவற்றைப் பட்டியலிடுங்கள் . இந்தப் பட்டியலில் விடுபட்டதில் முதலீடு செய்வது Invert Investing . உதாரணமாக சேமிப்பு முதலீடு அல்ல . காப்பீடு முதலீடு அல்ல . F & O உள்ளிட்ட ஊக வணிகங்கள் எவையும் முதலீடு அல்ல . பணவீக்கத்தை வெல்ல இயலாத கடன் பத்திர முதலீடுகள் , தங்கம் மற்றும் நிலம் போன்றவைகளும் முதலீடு அல்ல . எனில் எஞ்சியிருப்பது நிறுவனப் பங்குகள் மட்டுமே . இவ்வாறாக நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது என்ற முடிவை வந்தடைவதான உத்தி Invert Investing என்று அழைக்கப்படுகிறது . பங்குகளில் முதலீடு செய்வது என்ற முடிவை எடுத்த பின்னர் அதனையும் Invert Investing க்கு உள்ளாக்கலாம் . எப்படி என்று யோசித்துப் பாருங்கள் .
கேள்வி : தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்குக் கடன் - முதல் விகிதம் ஏன் அதிகமாக இருக்கிறது ?
பதில் : தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்கள் மட்டுமல்ல வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் அதிகமான கடன் - முதல் விகிதங்களைக் கொண்டிருக்கும் . ஏனெனில் இத்தகைய நிறுவனங்களுக்குப் பணம் (கடன்) தான் மூலப்பொருள் . பணத்தைக் கடனாக வழங்கி இலாபம் சம்பாதிப்பது தான் இந்த நிறுவனங்களின் வர்த்தக மாதிரி (Business Model) எனவே இவைகளின் கடன் - முதல் விகிதத்தைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் . இத்தகைய நிதி நிறுவனங்களில் அவைகளின் வாராக் கடன் (NPA) மற்றும் Net Interest Margin போன்ற தரவுகளை மட்டும் முக்கியமாகப் பார்க்க வேண்டும் .
கேள்வி : Side Car Investment ?
பதில் : உங்கள் முதலீட்டு வாகனத்தை வேறொருவர் இயக்குவதாகக் கொள்ளலாம் . எனில் நீங்கள் மேற்கொள்வது side car investment . ஒரு வகையில் பங்கு முதலீடுகள் பரஸ்பர நிதி முதலீடுகள் அனைத்தும் side car investment என்பதாகவும் சொல்லலாம் . Side car investment ன் சிகர உதாரணம் Berkshire Hathaway நிறுவனம் . Berkshire Hathaway பங்குகளை வாங்கினால் உங்கள் முதலீட்டு வாகனத்தின் ஓட்டுநர் வாரன் பஃபெட் .
கேள்வி : வரவர உங்கள் பதிவுகள் அலுப்பைத் தருவது மாதிரியான ஒரு உணர்வு ... கூறியது கூறல் நிரம்ப இருக்கிறது ...
பதில் : முதலீடு என்பது கேளிக்கையோ அல்லது சாகச நிகழ்ச்சியோ அல்ல . முதலீடு என்பது புல் முளைப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது பூச்சு உலர்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பது போன்றது. அது அலுப்பைத் தருவதாக மட்டுமே இருக்கும் . அவ்விதம் அலுப்பைத் தருவதாக இருந்தால் நாம் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக அர்த்தம் . வாரன் பஃபெட்டின் முதலீட்டு நிறுவன ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து சென்றவர் பஃபெட் கூறியதையே கூறியதாகப் புகார் கூறியதையும் இங்கே கூற விரும்புகிறேன் .
Comments
Post a Comment