பங்குச்சந்தை பதில்கள் - 1

பங்குச்சந்தை பதில்கள் - 1


கேள்வி : பங்குச்சந்தை முதலீடு அபாயம் தானே ? 

பதில் : பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பது அதை விட அபாயம் . பணவீக்கத்தை வெல்ல வேண்டுமென்றால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தே ஆக வேண்டும் .


கேள்வி : அதிக வருமானம் தரக்கூடிய காப்பீட்டுத் திட்டம் ஒன்றைப் பரிந்துரையுங்கள் ?

பதில் : கேள்வியே தவறு .


கேள்வி : வாய்ப்பு விலையைச் (opportunity cost) சுருக்கமாக விளக்க முடியுமா ?

பதில் : நீங்கள் நிறுவனப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்கிறீர்கள் . உங்களுக்கான CAGR 15 சதவீதம் . அதே சமயம் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 18 சதவீத CAGR கொடுத்திருக்கிறது . எனில் , உங்களுக்கான வாய்ப்பு விலை 3 சதவீதம் .


கேள்வி : பங்குச்சந்தையில் நீண்ட காலம் என்பது எவ்வளவு காலம் ?

பதில் : ஐந்து ஆண்டு பத்து ஆண்டு என்று ஆளாளுக்கு ஒரு கணக்கைச் சொல்வார்கள் . நீண்ட காலம் என்பது நம் காலத்தையும் கடந்தது .


கேள்வி : Multibaggers பங்குகள் என்றால் என்ன ? அவைகளை எவ்விதம் இனங்காண்பது ?

பதில் : மதிப்பு முதலீடாக வாங்கிய தரமான நிறுவனப்பங்குகள் நீண்ட கால அளவில் பன்மடங்காளராக மலர்கின்றன . இவ்விதம் மலர்விக்க நீங்கள் அந்தப் பங்குகளை வைத்திருத்தல் முக்கியத்துவம் பெறுகிறது . மற்றபடி  பன்மடங்காளர் பங்குகள் என்று தனிப்பட்டு எதுவும் கிடையாது . ஒரு பங்கை பன்மடங்காளராக உருவாக்குவதும் உருவாக்காததும் உங்கள் கையில் மட்டுமே உள்ளது .


கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

பதில் : நிறையப் படிக்க வேண்டும் ... நிறையச் சிந்திக்க வேண்டும் ...


கேள்வி : பங்குச்சந்தையில் தின அடிப்படையில் இலாபம் பார்க்கலாமா ? 

பதில் : ஓ ... தாராளமாக ... ஒரேயொரு நிபந்தனை மட்டும் . நீங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்திருக்க வேண்டும் .


கேள்வி : நாளைய பங்குச் சந்தை என்னவாக இருக்கும் ?

பதில் : அது ஏறி இறங்கும் . இந்த பதிலை அமெரிக்க நிதியாளர் J P Morgan பல்லாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறார் .


கேள்வி : பங்குச்சந்தையில் வெற்றி பெற எது தேவை ? பணமா அல்லது குணமா ?

பதில் : தாமதமான மனநிறைவு , பொறுமை , நீடிப்புத்திறன் , வெற்றி தோல்விகளை சமமாகப் பாவிக்கும் தன்மை , நீண்ட கால நோக்கு முதலான கல்யாண குணங்கள் தான் தேவை . பணம் ? அது கொஞ்சமே கொஞ்சம் போதும் .


கேள்வி : உலகப் பணக்காரர்களின் சொத்துக்களை உலக மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டால் உலகம் சுபிட்சம் பெற்று விடும் தானே ?

பதில் : ஒரேயொரு சின்னப் பிரச்னை இருக்கிறது . வாரன் பஃபெட் அவருடைய பகுதிப் பணத்தைப் பங்குகளில் முதலீடு செய்து மீண்டும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார் . மற்றவர்கள் தத்தம் பழைய நிலைமைக்குத் திரும்பி விடுவர் .

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்