சில வித்தியாசங்கள்

சில வித்தியாசங்கள்

நிறுவனம் வேறு. நிறுவனப் பங்கு என்பது வேறு. IRCTC ஒரு அகழி நிறுவனம்.IRCTC நிறுவனப்பங்கு அதன் IPO விலையான 320 ல் முதலீட்டிற்கு உகந்தது. ஆனால் அதன் தற்போதைய விலையான 2000 ல் அது மிகை மதிப்பில் (over valued) வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால் நிச்சயமாக முதலீட்டிற்கு உகந்தது அல்ல. ஒரு பங்கின் மூலமான உங்கள் வருமானம் நீங்கள் அந்தப் பங்கை விற்கும் போது தீர்மானிக்கப் படுவதில்லை. மாறாக எவ்வளவு குறை மதிப்பில் (under valued) வாங்குகிறீர்கள் என்பதில் தீர்மானிக்கப்படுகிறது.ஒரு பங்கை 30 PE மதிப்பில் வாங்குகிறீர்கள் என்றால் 30 வருடத்தில் அந்த நிறுவனம் எவ்வளவு சம்பாதிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அத்தனை சம்பாத்தியத்தையும் கொடுத்து வாங்குவதாக அர்த்தம். நீங்கள் நினைக்கும் வண்ணம் அந்த நிறுவனம் சம்பாதித்தாலும் பங்குச்சந்தை அந்நிறுவனத்திற்கு 30 PE ஐ தொடர்ந்து வழங்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது. நாளைக்கே கரடிச்சந்தையில் PE மதிப்பு குறைந்து 20 களில் வர்த்தகமானால் நீங்கள் நஷ்டமடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். நிறுவனம் நீங்கள் கணக்கிட்ட படி சம்பாதித்தும் நிறுவனப் பங்கிற்கு நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கியதன் மூலமாக நஷ்டமடைவது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது.

அதே மாதிரி முதலீட்டு வருமானம் (Investment Return) என்பது வேறு. முதலீட்டாளர் வருமானம் (Investor Return) என்பது வேறு. HDFC Equity Fund தொடக்கத்திலிருந்து 20 சதவீத CAGR கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அதனை NFO (New Fund Offer) ல் வாங்கி நாளது தேதி வரை வளர்ச்சித் தேர்வில் (Growth Option) வைத்திருப்பவருக்குத் தான் அந்த வருமானம் கிடைக்கும். பங்காதாயத்தைக் கையில் வாங்கினால் அதை என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் வருமானம் மாறி  விடும். ஒரு அமெரிக்க ஆய்வின் படி பங்குச்சந்தை நீண்ட கால அடிப்படையில் 10 சதவீத வருமானம் கொடுத்திருக்கிறது. ஆனால் சராசரியாக முதலீட்டாளர்களுக்கு 3 சதவீதம் தான் வருமானம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஏன் இந்த 7 சதவீத வேறுபாடு? முதலீட்டாளர்கள் காளைச்சந்தையினால் ஈர்க்கப்பட்டு உயர் மதிப்பில் பங்குகளை வாங்குவது, கரடிச்சந்தையில் குறை மதிப்பில் விற்பது அடிப்படையான ஒரு காரணம். மேலும் குறுகிய கால மற்றும் தினசரி வணிகத்திற்கான உராய்வுச் செலவுகள்... பரஸ்பர நிதி முதலீட்டாளர்களாக இருக்கும் பட்சத்தில் கடந்த வருட சிறந்த நிதிகளைத் துரத்தித் துரத்தி முதலீடு செய்வது ஒரு முக்கியமான காரணம். இதில் பிரச்னை என்னவென்றால் சிறந்த நிதிகள் வருடாவருடம் மாறிக் கொண்டே இருக்கும். இந்த இடத்தில் தான் குறியீட்டு பரஸ்பர நிதிகள் (Index Mutual Funds) முக்கியத்துவம் பெறுகின்றன. குறியீட்டு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதின் மூலமாகச் சந்தை கொடுக்கும் வருமானத்தைப் பெறலாம். வாரன் பபெட் அவருடைய மனைவிக்கு, அவருடைய காலத்திற்குப் பிறகான முதலீட்டை மேற்கொள்ள குறியீட்டு பரஸ்பர நிதிகளை சிபாரிசு செய்வது இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது. அந்நிய தரகு நிறுவனம் ஒன்றின் ஆய்வின் முடிவு உங்களை வியக்க வைக்கலாம். ஏதோ சில காரணங்களால் மறு கொள்முதல் (Redemption) மேற்கொள்ளாமல் இருக்கும் இறந்த முதலீட்டாளர்களின் பரஸ்பர நிதி பங்குத் தொகுப்பு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறதாம். இது எப்படி இருக்கு?

நிறையப் பேர் 'காளை'யையும் 'மூளை'யையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். காளைச்சந்தை என்பது வேறு. மூளைத் திறமை என்பது வேறு. காளைச்சந்தையில் நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கும். எந்தப் பங்கை வாங்கினாலும் பன்மடங்காளர் (Multi Bagger) தான். கரடிச் சந்தையில் இது அப்படியே தலைகீழாகி விடும். வாரன் பஃபெட் கூறுவது மாதிரி கரடிச்சந்தையில் தான் யார் நீச்சல் உடையில் நீந்துகிறார்கள் யார் வெறுமனே நீந்துகிறார்கள் என்பது தெரிய வரும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அடிப்படைப் பகுப்பாய்வை மேற்கொண்டு, மதிப்பு முதலீடாக, நீண்ட கால அடிப்படையில் பங்குகளை வாங்கி வைத்திருப்பதை மட்டும் தான் (இதை மீண்டும் மீண்டும் சொல்வேன்) அதிலும் சில நிறுவனங்களின் கதை வசனம் நாம் நினைத்தபடி இருக்காது. வாரன் பஃபெட்டின் வெற்றி விகிதம் பத்துக்கு ஆறு அல்லது ஏழு மட்டுமே. அந்த ஏழிலும் ஒன்று 100 மடங்காளர், இரண்டு 10 மடங்காளர், இரண்டு 2 மடங்கு ... என்பதாகத் தான் கூடும். மேலும் நஷ்டமான நிறுவனப்பங்குகளை அதிக சேதாரமில்லாமல் விற்று விட்டு வெளியேறினால் சராசரியாக 20 சதவீத CAGR கிடைக்கப்பெறும் வாய்ப்பு மிக அதிகம். இந்த இடத்தைக் கொஞ்சம் கவனியுங்கள். 20 சதவீத CAGR கிடைக்கும் என்று சொல்லவில்லை. கிடைக்கப்பெறும் வாய்ப்பு மிக அதிகம் என்பதாக மட்டும் தான் சொல்லியிருக்கிறேன். அவ்வாறு தான் சொல்ல முடியும். பங்குச்சந்தையின் இன்னொரு பெயர் உத்தரவாதம் இல்லாத சந்தை. அல்லது உணர்ச்சிகள் முட்டி மோதும் சந்தை என்பதாகவும் சொல்லலாம். காளைக்கும் கரடிக்குமான இந்த உணர்ச்சி மோதல்களை நாம் உணர்ச்சி வசப்படாமல் எவ்விதம் கையாள்கிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

Daniel Crosby - மணி மொழிகள்

பங்குச்சந்தை பதில்கள் - 14