பணம் ஒரே நிறம்

பணம் ஒரே நிறம்

நிற அறியாமை என்பதான Colour Blindness பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிவப்பு மற்றும் பச்சை , நீலம் மற்றும் மஞ்சள் முதலான வண்ணங்களைப்  பிரித்தறிய முடியாத ஒரு குறைபாடு நிற அறியாமை என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது பரம்பரையாகவோ அல்லது கண் விழித்திரையில் உள்ள கூம்புகளின் எண்ணிக்கைக் குறைவு அல்லது கூம்புகளின் குறைபாட்டினால் வருகிறது. வெவ்வேறு நிறங்களைப் பிரித்தறிய முடியாத இந்தக் குறைபாடு பண விஷயத்தில் அப்படியே தலைகீழாக மாறுகிறது. நம்மில் பெரும்பாலானோர் ஒரே நிறத்தில் இருக்கும் பணத்தை வெவ்வேறு நிறங்களாகப் பார்க்கும் ஒரு குறைபாட்டிற்கு ஆட்பட்டிருக்கிறோம். இதனைப் பண அறியாமை (Money Blindness) என்று அழைக்கலாம்.

ஊக வணிகத்தில் ஒருவர் ஈடுபட்டு அவர் முதலீடு செய்த மன்னிக்கவும் ஊக வணிகத்தில் இட்ட பணத்தைப் போல் நான்கு மடங்கு பணம் ஈட்டுவதாகக் கொள்ளலாம். ஊக வணிகத்தில் இட்ட சொந்தப் பணத்தையும் ஊக வணிகம் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தையும் அவர் ஒரே மாதிரியாகக் கருத மாட்டார். சொந்தப் பணத்தின் மதிப்பு வேறு. ஊக வணிகத்தின் மூலமாக வந்த பணத்தின் மதிப்பு வேறு. இவ்வாறு ஊக வணிகம் மூலமாகக் கிடைக்கப்பெற்ற பணம் House Money என்பதாக அழைக்கப்படுகிறது. ஊக வணிக நிலையங்கள் இந்த உளவியலுடன் தான் தங்கள் ஆட்டத்தைத் தொடங்கும். முதலில் நீங்கள் எளிதில் வெற்றி பெறும் வண்ணம் ஆட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த ஆட்டங்களில் நீங்கள் வெற்றி பெற்று அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லும் போது உங்கள் ஊகப் பணத்தையும் சொந்தப் பணத்தையும் இழக்கும் வகையில் ஆட்டத்தின் போக்கு திசைமாறிச் செல்லும். அதனால் தான் தேர்ந்த ஆட்டக்காரர்கள் ஊக வணிக நிலையங்களுக்கு , தாங்கள் இழந்தால் தாங்கக்கூடிய அளவிலான பணத்தை மட்டும் எடுத்துச் செல்வார்கள். வென்றாலும் தோற்றாலும் ஒரு  ஆட்டத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வென்றால் ஒரு கட்டத்தில் ஆட்டத்தை நிறுத்தி விடுவார்கள். தோற்றால் இந்த நாள் எனக்கானது இல்லை என்ற அளவில் அடங்கி விடுவார்கள். ஊக ஆட்டத்தில் நீயா நானா விளையாடக்கூடாது. பணத்தை அள்ளித்தரும் ஒரு வெற்றிகரமான (?) இயந்திரத்தை அடுத்தவர் பிடித்து விடக்கூடாது என்று diaper போட்டுக் கொண்டு சூதாடுபவர்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

பங்குச்சந்தையிலும் இவ்வாறு குறுகிய காலத்தில் தினசரி வணிகம் மற்றும் பெறுதிகள் (derivatives) மூலமாகப் பணம் ஈட்டியவர்களுக்கு அந்தப் பணத்தை வெவ்வேறு நிறங்களில் பார்ப்பதான ஒரு பார்வை மட்டுமே இருக்கும். அந்தப் பணத்தை அவர்கள் கையாளும் விதமே வேறு விதமாக இருக்கும். ஆனால் பணம் ஒரே நிறம் தான்.

இந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளப் பங்குச்சந்தைக்குக் கூடச் செல்ல வேண்டாம். அன்றாட நிகழ்வுகளிலேயே நாம் இந்தப் பணத்தின் நிற அறியாமை என்ற ஒரு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம். உயர்ந்து வரும் விலைவாசியின் பொருட்டுக் கொடுக்கப்படும் பஞ்சப்படி (Dearness Allowance) மற்றும் தீபாவளி முதலான பண்டிகைகளின் போது கிடைக்கும் போனஸ் முதலிய பணங்கள் நாம் பெறும் ஊதியத்தின் ஒரு அங்கமே. போனஸ் என்பது கொடுபடா ஊதியம் மட்டுமே. அதே மாதிரி சம்பளக் கமிஷன் போட்டு அவ்வப்போது கிடைக்கப்பெறும் ஊதிய நிலுவையும் நமது சம்பளப்பணம் தானே ? ஆனால் நாம் இந்த எல்லாப் பணங்களையும் ஒரே தராசில் தான் நிறுக்கிறோமா ?

கடன் அட்டையை எடுத்துக் கொள்ளலாம். சட்டைப்பையிலிருந்து பணமாகக் கொடுத்தால் இருக்கும் வலி கடன் அட்டையில் ஏன் இல்லை ?

EMI ல் வீட்டுக்கடன் தவிர வேறு எந்தக் கடனையும் வாங்கக்கூடாது. வீடு என்பது பண வீக்கத்தை ஒட்டியோ அல்லது அதனை விடக் கொஞ்சம் கூடுதலாகவோ வளர்ந்து வரக்கூடிய ஒரு முதலீடாகும். மேலும் அதற்கான வரிச்சலுகைகளையும் கணக்கிட்டால் இன்னும் கூடுதலான வருமானம் கிடைக்கும். மேலும் ஒரு பங்குப் பத்திரத்திலோ அல்லது கடன் பத்திரத்திலோ நாம் குடியிருக்க முடியாது. இவ்வாறு உயர்ந்து வரும் ஒரு முதலீட்டை நாளும் தன் மதிப்பை இழந்து வரும் பணத்தில் கொடுக்க இருக்கும் வாய்ப்பை அடைந்தே தீர வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வீட்டுக்கடன் மூலமாக வீட்டை வாங்குவது SIP முறையிலான முதலீட்டைப் போன்றது. வீட்டுக்கடன் தவிர அலைபேசி உள்ளிட்ட பொருட்களை EMI ல் வாங்குவதெல்லாம் தவறான ஒரு போக்கு. ஒரு சிலர் அவ்வப்போது அலைபேசியை மேம்பாடு (upgrade) செய்து நிரந்தரக் கடனில் மூழ்கியிருப்பார்கள்.

நீண்ட கால நோக்கில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு இந்தக் குறைப்பார்வை இருக்காது. பணத்தைக் கஷ்டப்பட்டு ஈட்டுவதால் அதன் அருமையை அவர்கள் அறிந்திருப்பதாகத் தோன்றுகிறது.

லாட்டரியில் கோடிகளைக் குவித்தவர்கள் கொஞ்ச நாட்களில் பழைய நிலைக்குத் தள்ளப்படுவதற்கு முதன்மையான காரணம் அவர்கள் ஏதோவொரு வகையில் இந்தப் பணத்தை தங்கள் சொந்தப் பணமாகக் கருதாமை தான். பங்குச்சந்தையிலும் குறுகிய காலத்தில் பூவா தலையா போட்டுப் பணம் ஈட்டியவர்கள் கொஞ்ச நாட்களில் தலை குப்புறக் கவிழ்ந்து விடுவதற்கும் அடிப்படையான காரணம் இது தான்.

இன்னும் சிலர் ஒரு பக்கம் கடன் அட்டையில் ஏகப்பட்ட நிலுவையை வைத்து விட்டு வங்கி சேமிப்புக் கணக்கில் ஏகப்பட்ட பணத்தை வைத்திருப்பார்கள். கடன் அட்டைக் கடன்களுக்கான வட்டி விகிதம் 24 சதவீதம். வங்கி சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதம் 2.75 சதவீதம். வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொண்டு கடன் அட்டைக் கடனை அடைத்தால் 21.25 சதவீதம் ஈட்டியதாக அர்த்தம்.

இன்னும் சிலர் ஓய்வூதியத்திற்காக முழு வாழ்க்கைக் காப்பீடு ( Whole Life Policy) எடுத்துக் கொள்வார்கள். காப்பீட்டின் பொருட்டு மட்டுமே காப்பீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலீட்டின் பொருட்டுக் காப்பீடு எடுத்துக் கொள்ளக் கூடாது. காப்பீடும் முதலீடும் ஒன்றல்ல .  காப்பீட்டின் மூலமான முதலீட்டு வருமானம் பணவீக்கத்தை வெல்வதாகக் கூட இருக்காது. நீண்ட கால முதலீட்டுத் திட்டமான ஓய்வூதியத்திற்கு பங்கு முதலீடுகள் தான் சிறந்த பலாபலன்களைத் தருவதாக இருக்கும்.

Pocket investing என்று அழைக்கப்படும் இந்த மாதிரி உதிரி உதிரியான முதலீடுகள் நீண்ட கால மதிப்பு உருவாக்கத்திற்கு எந்த வகையிலும் உதவாது. இந்த உதிரிகளை மாலையாகக் கோர்த்துப் பார்க்கும் ஒரு முழுமையான பார்வையைக் கைக்கொள்ளுங்கள்.

Pocket investing , முறையான முதலீட்டுத் திட்டம் என்று அழைக்கப்படும் SIP போன்றவற்றில் மட்டும் பயன் தருவதாக இருக்கும்.

வாரன் பஃபெட் குறித்த ஒரு சிறிய உண்மைச் சம்பவத்தை இந்த இடத்தில் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். பபெட் ஒரு சமயம் தனது நண்பர்கள் சிலருடன் விளையாட்டாக கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது விற்பன்ன விளையாட்டை விளையாடும் அவரது நண்பர்கள் பஃபெட் ஒரு stroke அடிக்க ஒரு டாலர் பந்தயம் கட்டுமாறு கேட்டுக் கொண்டனர். பஃபெட் தான் வெற்றி பெற என்ன வாய்ப்பு என்று கேட்கையில் மிகவும் சிறிய அளவிலான வாய்ப்பு மட்டுமே இருப்பதாக நண்பர்கள் கூறினர். பஃபெட் அந்தப் பந்தயத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நன்றாக யோசித்துப் பாருங்கள் , உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பஃபெட் ஆட்டத்தின் முடிவு தனக்குச் சாதகமாக இல்லாத போது வெறும் ஒரு டாலர் பணத்தைக் கூட ஊக வணிகத்தில் இடவில்லை . எல்லா இடங்களிலும் பணம் ஒரே நிறம் தான்.

சின்னக்கதை ஒன்றுடன் இந்தப் பதிவை நிறைவு செய்யலாம். ஒரு முறை புதுமணத் தம்பதியர் வெளி நாட்டிற்குத் தேனிலவு சென்றார்கள். கணவன் pocket investing ல் புலி. எல்லாப் பணத்தையும் அது அதற்கான pocket களில் போட்டு வைத்து விடுவான். தேனிலவு செல்லும் போது ஊக வணித்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து வைத்து விட்டான். அந்தப் பணத்தை முறையாக ஊக வணிகத்தில் இழந்த ஒரு நாளின் இரவுப் பொழுதில் ஊக வணிகப் பணத்தை வைத்திருந்த பையைத் துழாவும் போது அதில் ஒரு பத்து ரூபாய் நாணயம் கிடைத்தது. அதனுடன் பழைய சாவிக் கொத்து ஒன்றும் தட்டுப்பட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த 8 என்ற எண் இரவு விளக்கில் மின்னியது. அந்தப் பத்து ரூபாயும் சாவிக் கொத்தும் ஏதோ ஒரு செய்தியைச் சொல்வதாகக் கணவனுக்குத் தோன்றியது. தூங்கிக் கொண்டிருந்த மனைவியைத் தொந்தரவு செய்யாமல் கதவைப் பூனை போல் பூட்டி விட்டுக் கணவன் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் தரைத் தளத்திலிருந்த ஊக வணிக விடுதிக்குச் சென்றான்.  கையிலிருந்த பத்து ரூபாயை எட்டு என்ற எண்ணில் பணயம் வைத்து ஊக வணிகத்தைத் தொடங்கினான். அந்த ஊக வணிகச் சக்கரம் தனது விதியான ஆட்டத்தைத் தொடங்கியது. சக்கரம் மிகச் சரியாக எட்டு என்ற எண்ணில் வந்து நின்றது. கணவனின் பத்து ரூபாய் நூறு ரூபாய் ஆனது. கணவன் மீண்டும் எட்டில் கட்டினான். இப்போதும் எட்டு வந்தது. நூறு ரூபாய் இப்போது ஆயிரம் ரூபாய் ஆகி விட்டது. இப்படியே சக்கரம் தொடர்ந்து எட்டுப் போட்ட வண்ணம் இருந்தது. கணவனின் ஊகப் பணம் இப்போது பத்து கோடி ரூபாய் ஆகி விட்டது. புள்ளியியல் விதிகளின் படி இது அபூர்வத்திலும் அபூர்வமாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும். கணவன் இப்போது பத்து கோடி ரூபாயையும் எட்டு என்ற எண்ணில் பணயம் வைத்தான். சக்கரம் இந்த முறை நின்ற எண்ணும் எட்டு மட்டுமே. பத்து கோடி நூறு கோடி ஆகி விட்டது. கணவன் மீண்டும் நூறு கோடியை எட்டில் பணயம் வைத்தான். சக்கரம் இந்த முறை ஏழில் நின்று விட்டது. கணவன் நூறு கோடி ரூபாய்க்கு அவன் தங்கியிருந்த ஹோட்டலையே விலைக்கு வாங்கியிருக்கலாம். கணவன் பூனை போல் மீண்டும் அறைக்கதவைத் திறந்து கட்டிலில் படுக்கும் போது ஆசை மனைவி விழித்துக் கொண்டு இந்த இரவு நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள் என்பதாகக் கேட்டாள். கணவன் கீழே ஊக வணிக விடுதிக்குச் சென்று வருவதாகக் கூறினான். மனைவி எவ்வளவு இழந்தீர்கள் என்பதாகக் கேட்டாள். வெறும் பத்து ரூபாய் தான் என்றான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்