பயணமே இலக்கு

பயணமே இலக்கு

The Journey is the Destination

புதையலை விட புதையல் வேட்டை தான் உவப்பானது. சுற்றுலா செல்வதான ஒரு சாதாரண விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம். சுற்றுலா செல்வதைக் காட்டிலும் சுற்றுலா செல்வதற்காக நாம் தயாராகும் அந்த நிலை தான் முக்கியமானது. மலை வாசஸ்தலத்திற்குச் செல்வதாக இருந்தால் கம்பளிச்சட்டை, சின்னஞ்சிறார்களுக்கு பனிக்குல்லாய், மாற்றுத்துணிகள், ஏடிஎம் அட்டை இத்யாதிகளை எடுத்து வைப்பது, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்வது (சித்தப்பா காலமாகி விட்டார்- எத்தனை முறை தான் தாத்தாவைக் காலமாக்குவது? ) அண்டை அயலாரிடம் பெருமை பேசி அவர்களின் பொறாமையைத் தூண்டுவது என்பதான அந்தக் காலகட்டம் தான் அலாதியானது. தீபாவளியை விட தீபாவளிக்கு நாம் தயாராகும் கால கட்டமே ஒரு மகிழ்ச்சி மத்தாப்பு. ஜவுளிக்கடையிலிருந்து இனிப்புக்கடை வரை எங்கெங்கிலும் தள்ளுபடி. தொழிலாளர்களுக்கு போனஸ். எங்கும் பணப்புழக்கம். தீபாவளியை நெருங்க நெருங்க பீத்தோவனின் ஒரு இசைக்கோர்வை மாதிரி ஒரு உச்சக்கட்ட பரபரப்பு. தீபாவளியை விட தீபாவளிக்கு முந்தைய நாட்கள் தான் குதூகலமாக இருக்கும். தீபாவளியன்று புஸ்வாணம் மாதிரி நம் மகிழ்ச்சியும் புஸ்வாணமாகி விடும். தீபாவளிப்பின்னிரவில் இனம் புரியாத ஒரு சோகம் நம் நெஞ்சைக் கவ்வும். ஒரு பொருளை அடைவதை விட அந்தப் பொருளின் மீதுள்ள ஆவலே அதிக ஆனந்தம்  தருவது என்பது கவி காளிதாசனின் வைர வரிகள். வழிமுறைகளையும் அதனுடன் சேர்த்து வருமானத்தையும் அனுபவியுங்கள், ஏனென்றால் நீங்கள் வழிமுறைகளில் தான் வாழ்கிறீர்கள் என்று வாரன் பஃபெட்டின் destiny pair சார்லஸ் முஞ்சர் கூறியிருக்கிறார். முறையான முதலீட்டுத் திட்டங்களில் (systematic investment plan) மாதாமாதம் முதலீடு செய்வதன் உளவியலும் இது தான். புதையலை அப்புறம் எப்போது தான் அனுபவிப்பது? பயணமே நாம் செல்ல வேண்டிய இலக்கு. பயணமே நமக்கான பரிசு. வாரன் பஃபெட்  பூவுலகின் ஆகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். பங்கு முதலீடுகளின் மூலம் மட்டுமே பணக்காரர் ஆன உலகின் ஒரே ஒருவர். அவர் இனிமேல் பணம் சம்பாதித்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அவருடைய வாரிசுகளுக்குத் தேவையான அளவு என்று அவர் கருதும் பணத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டார். பெரும்பான்மையான பங்குகளைப் பில்கேட்ஸின் அறக்கட்டளைக்குத் தானமாகக் கொடுத்து விட்டார். இன்னமும் ஏன் அவர் பங்குச்சந்தையில் செயலாக இருக்கிறார்? தரமான பங்குகளை இனங்கண்டு முதலீடு செய்வது ஒரு புதிரை விடுவிப்பது மாதிரி. Intellectual stimulation என்பார்கள். ஒரு அறிவுசார் தூண்டுதல். ஒரு கிளர்ச்சி. அது தான் அவரைச் செயலாக வைத்திருக்கிறது. மற்றபடி பணம் என்பது ஒரு துணை விளைபொருள் (by-product) மட்டுமே. வண்ணநிலவனின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருகிறது. 

எதையேனும் சார்ந்திரு

கவித்துவம்

தத்துவம்

காதல்

இங்கிதம்

சங்கீதம் இப்படி

எதன் மீதேனும் சாய்ந்திரு

இல்லையேல் உலகம்

காணாமல் போய்விடும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பங்காதாயம் - பாடப்படாத ஒரு பாடல்

பங்குச்சந்தை பதில்கள் - 14

Daniel Crosby - மணி மொழிகள்